Bitter Berry Book Release Slideshow: SHADAGOPAN’s trip to Colombo, Sri Lanka was created by TripAdvisor. See another Colombo slideshow. Create a free slideshow with music from your travel photos.

Monday, December 13, 2010

கோதண்டராமய்யர் நடேசய்யர் (1887 1947)


கோதண்டராமய்யர் நடேசய்யர்

(1887 1947)

1.0 அறிமுகம்
கோதாண்டராமய்யர் நடேசய்யரின் வாழ்வும் பணியும் பல பரிமாணங்களில் வைத்துப் பார்க்கப்பட வேண்டும். தாம் வாழ்கின்ற சமூகம் தொடர்பாக ஆழமாக உற்றுப் பார்த்து அங்கு ஒரு சாரார் அடிமை விலங்கு கொண்டு பிணிக்கப்பட்டு துன்பத்திலும் துயரத்திலும் ஆழ்த்தி அடக்கி ஒடுக்கப்படும்போது மற்றுமொரு சாரார் உண்டு களித்து உன்மத்தம் கொண்டிருப்பதைப் பொறுக்காமல் தர்மா வேசங்கொண்டு எந்த மனிதன் பொங்கிச் சீறுகிறானோ அவன் உன்னதத்தில் வைத்துப்போற்றப்பட வேண்டும். அத்தகைய உன்னத உத்தம மனிதர்களில் ஒருவர்தான் கோ. நடேசய்யர். இவர் பணி அநீதிகள் கண்டு பொங்கிச் சீறும் பத்திரிகையாளனாக ஆரம்பித்து இலட்சக்கணக்கான இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளிகளின் அடிமை விலங்கு உடைக்கும் தொழிற்சங்கவாதியாகத் தொடர்ந்து இம்மக்களுக்கு ஒரு அரசியல் தலைமைத்துவம் வழங்குவதில் முடிவெய்துகின்றது. இவரது அறுபது ஆண்டுகால ஆயுட்காலத்தில் இலங்கையில் வாழ்ந்த 28 வருடகாலம் (19191947) வரை மிகப் போராட்டங்கள் மிக்கதாகும். இக்காலத்தில் இலங்கை வாழ் இந்திய வம்சாவழித் தமிழர்களின் அரசியல், சமூக பொருளாதார, தொழிற்சங்க மற்றும் இன, மத, மொழி, கலை கலாசார வாழ்வுரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக முன்னெடுத்த போராட்டங்களே இன்றும் அவர் நாமத்தை நன்றியுடன் நினைவு கூறச் செய்கின்றன. இன்று என் போன்றவர்கள் சட்டத்தரணிகளாக, பொறியியலாளர்களாக, வைத்திய நிபுணர்களாக, இதழியலாளர்களாக தோட்டத் தொழிலாளி என்ற கொத்தடிமை முறையில் இருந்து விடுபட்டு வெற்றி பெற்றிருக்கிறோமென்றால், அம்முயற்சியில் கோ. நடேசய்யர் போன்றவர்களின் இரத்தமும் வியர்வையும், உழைப்பும், தியாகமும் , அர்ப்பணிப்பும் கலந்திருந்தமைதான் காரணம்.
அத்தகைய ஒரு அதிமானுடன் தன் வாழ்வை அர்ப்பணித்து இன்று 62 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இவர் 1947 நவம்பர் மாதம் 7 ஆம் திகதியன்று தன் இன்னுயிரை தம்சார்ந்த மக்களுக்கு பணி புரிந்து ஈந்தார்.

1.1 ஆரம்ப கட்டப் பணிகள்

இலங்கையில் நடேசய்யரின் பிரசன்னம் 1919 ஆம் ஆண்டுடன் ஆரம்பமாகிறது. இவர் முதன் முதல் இலங்கை வந்தது தமது "வர்த்தக மித்திரன்' என்ற பத்திரிகைக்கு சந்தாதாரர்களை சேர்த்துக் கொள்வதற்காக, இவரின் ஆரம்பகால சமூகப் பணிகள் பத்திரிகை ஆசிரியர் என்ற வகையிலேயே ஆரம்பமாகின்றன. 1887, ஜனவரி 14 ஆம் திகதி தஞ்சாவூர், தென் ஆற்காடு, வளவனூர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையார் கோதாண்டராமய்யர் "தாசில்தார்' உத்தியோகம் பார்த்து வந்தார். தாயார் பகீரதம்மாள் தஞ்சை திரு. வி.க. கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றியவர். இவரது ஆரம்பகால சமூகப் பணி தஞ்சை, திருவாவூர், குற்றாலம், வர்த்தக சங்கத்தைத் தோற்றுவித்தலுடனும், இதை ஒட்டியதாக வ. ராமசாமி ஐயங்காருடன் இணைந்து "வர்த்தக மித்திரன்' என்ற மாதம் இருமுறை வெளிவரும் பத்திரிகையை ஆரம்பித்தலுடன் ஆரம்பமாகின்றது.

1.2 இலங்கையில் கோ. நடேசய்யரின் பிரசன்னமும் அதன் பின்னணியும்

இலங்கையில் 1919 ஆம் ஆண்டு நடேசய்யர் காலடி எடுத்து வைத்தபோது அது ஒரு தொழிலாள வர்க்க கொந்தளிப்பு மிக்க காலமாகவே இருந்தது. இலங்கையிலும் இந்தியாவிலும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கெதிராக தேசிய இயக்கங்கள் பெரும் வீறுகொண்டிருந்தன. இலங்கையில் மாத்திரமின்றி உலகெங்கும் தொழிலாளர்கள் மார்க்ஸிய, லெனினிய, சோசலிஷ கம்யூனிச கருத்துக்களில் பெரும்பற்றுக் கொண்டிருந்தினர். ரஷ்யாவில் 1917 ஆம் ஆண்டின் அக்டோபர் புரட்சியின் வெற்றி ஜுவாலைகள் ""உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்ற பதாகையின் கீழ் கனன்றெரிந்து கொண்டிருந்தன.
இலங்கை வரலாறு ஏற்கனவே சில மாபெரும் தொழிலாளர் எழுச்சிகளையும், அரசியல் போராட்டங்களையும் சந்தித்திருந்தது. கொழும்பு அச்சகத் தொழிலாளர் வேலை நிறுத்தம் (1893), சலவைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் (1896),கொழும்பு கருத்தைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் (1912), சிங்கள, பௌத்த, முஸ்லிம்கள் மோதல் (1912 கம்பளை, 1915 கொழும்பு) என்பன பிரித்தானிய அரசுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்தன.
கொழும்பை மையமாகக் கொண்ட அரசியல் எழுச்சிகள் இந்திய தேசிய காங்கிரஸினரின் பிரித்தானிய எதிர்ப்பு இயக்கத்தை ஒட்டியதாகவே இருந்தது. இவ் இயக்கத்தின் தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, ஆகியோர் இலங்கை பௌத்த தேசியத் தலைமைகளால் பெரிதும் கவரப்பட்டிருந்தனர். எனினும் இந்த அரசியல் தொழிற்சங்க கருத்துக்களும், மாற்றங்களும், ஒருபோதும் மலையக இந்திய வம்சாவளி தொழிலாளர்களை சென்றடையவில்லை. அவர்கள் தொடர்ந்தும் "கூலிகள்' என்ற அழைக்கப்பட்டனர். ஆனால், நகர்ப்புறத் தொழிலாளர்கள் தம்மை தொழிலாளர்கள் என்று நாம கரணம் சூட்டிக் கொண்டனர்.

1.3 நடேசய்யரின் ஆரம்பகால நடவடிக்கைகள்

நடேசய்யர் இலங்கை வந்த காலப்பகுதியான 1920 களில் இலங்கையின் தேசிய அரசியலில் இலங்கை தேசிய காங்கிரஸ்,இலங்கை தொழிலாளர் கழகம் (ceylon national congress,ceylon labour union), இலங்கை இளைஞர் லீக், (ceylon youth league) ஆகிய அமைப்புக்கள் தீவிரமான அரசியலில் ஈடுபட்டிருந்தன. எனினும் இந்த அமைப்புக்கள் ஒரு போதும் தேயிலைப் பெருந்தோட்ட மக்களின் நலனில் அக்கறை காட்டவில்லை. அவர்களை வந்தேறு குடிகள் என ஒதுக்கிவைத்திருந்தனர். இவர்கள் தொடர்பில் முதல் குரல் எழுப்பிய பெருமை சேர். பொன்னம்பலம் அருணாச்சலத்தையே சாரும். இவர் 1913 ஆம் ஆண்டு தொடக்கம் 1922 ஆம் ஆண்டுவரை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மோசமான வாழ்க்கை நிலைமை, குறைந்த சம்பளம், அவர்களை மோசமான நிலைக்குத் தள்ளிய தொழிற் சட்டம் என்பவற்றுக்கெதிராக பல எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தõர்.
இத்தகைய ஒரு பின்னணியிலேயே நடேசய்யரின் அரசியல், தொழிற்சங்க, பத்திரிகைத்துறை செயற்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவரது பத்திரிகைத்துறை ஆற்றலைப் புரிந்து கொண்டிருந்த இலங்கை தேசிய காங்கிரஸ் செயற்பாட்டாளரான எம்.ஏ. அருளானந்தன் டொக்டர் ஈ.வி. ரட்ணம் ஆகியோர் தமது பத்திரிகையான "தேச நேசன்' பத்திரிகைக்கு ஆசிரியராக்கினார். அதனைத் தொடர்ந்து லோறி முத்துக் கிருஷ்ணாவை ஆசிரியராகக் கொண்டு இயங்கிய "சிட்டிசன்'பத்திரிகைக்கும் நடேசய்யரே வெளியீட்டாளராகவும் இருந்தார். இவர்களின் பத்திரிகைகளின் ஆசிரியத் தலையங்கங்களும், கட்டுரைகளும் அரசாங்கத்தை நடுக்கமுறச் செய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்தவைகளாக இருந்தன. இவர்களின் செயற்பாடுகள் தொடர்பான பொலிஸ் அறிக்கைகளில் இவர்களை அரசியல் எதிர்ப்பாளர்கள் என வர்ணிக்கப்பட்டிருந்தது. இவர்கள் அப்போதிருந்த சக்திமிக்க இளம் தொழிற்சங்கத் தலைவரான ஏ.ஈ. குணசிங்கவுக்கும் அவரது இலங்கை தொழிலாளர் கழகம் (ceylon labour union) என்ற அமைப்புக்களும் தமது ஒத்துழைப்பை நல்கினர். அத்துடன் இவர்களது நடவடிக்கைகள் இந்திய தேசிய காங்கிரஸின் "தேச பக்தி எழுச்சி' போராட்டங்களை ஒற்றியதாகவே இருந்தது.
1921, 1922 காலத்தில் பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசர், இந்திய, இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்தபோது நடேசய்யர் தமது பத்திரிகையில் இளவரசரை கடுமையாக விமர்சித்திருந்தார். ""பிரித்தானிய அரசே! கவனி! என்ற தலைப்பில் இவர் எழுதியிருந்த ஒரு ஆசிரியத் தலையங்கத்தை சுட்டிக்காட்டி இவரை நாடுகடத்த வேண்டுமென பொலிஸ் திணைக்களம் விதந்துரை செய்தது. இந்த ஆசிரியத் தலையங்கத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் அதிகாரம் இந்தியா, எகிப்து, அயர்லாந்து ஆகிய நாடுகளில் ஆட்டங்கண்டு வருவதாகவும், விரைவில் பேரரசு சரிந்துவிடும் என்றும் இவர் எழுதியிருந்தமை தொடர்பில் பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்திய தேசியவாதியும், கம்யூனிஸ்ட்டுமான டி.எம். மணிலாலுடனான நடேசய்யரின் தொடர்பு அவர் வாழ்வில் மற்றுமொரு மைல்கல்லாகும். இந்தியாவின் பரோடா பிரதேசத்தைச் சேர்ந்தவரான மணிலால் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற இந்தியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் போராடுபவர் என்ற பெயரைப் பெற்றிருந்தார். லண்டனில் சட்டக்கல்வி பயின்று 1907 ஆம் ஆண்டு அங்கேயே தமது சட்டத் தொழிலை ஆரம்பித்தார். இவர் மகாத்மா காந்தியுடன் இணைந்து மொறிசீயஸ், பீஜித் தீவுகள், தென்னாபிரிக்கா முதலிய நாடுகளில் வாழ்கின்ற இந்தியர்களுக்காகப் போராடி ஆங்கில அரசுக்கு சிம்மசொப்பனமாக இருந்தார்.
ஏற்கனவே 1917 ஆம் ஆண்டு ரஷ்ய ஒக்டோபர் புரட்சியின் பின் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் மார்க்ஸிய, கம்யூனிஸக் கருத்துக்களுக்கு பெரும் வரவேற்பிருந்தது. அக்கருத்துக்களைப் பின்பற்றும் "தீவிரவாதிகள்(radicals) என்ற அழைக்கப்பட்ட ஒரு சாராரும் இலங்கை அரசியலில் அப்போது உருவாகியிருந்தனர். தேசநேசனும், சிட்டிசனும் அவரது நடவடிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து பிரசித்தப்படுத்தின. மணிலால் ஒரு "சந்தேகத்துக்குரிய மனிதர்' என்று முத்திரை குத்தி அவரை ஒரு பொலிஸ் குழுவினர் பின் தொடர்ந்தனர். பின் பொலிஸாரின் விதந்துரையின் பேரில் மணிலாவை நாடு கடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கெதிராக பாரிய அளவில் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நடேசய்யரின் தேசநேசன், சிட்டிசன் மற்றும் அதனை சார்ந்த "தீவிரவாதிகள்' என்று அழைக்கப்பட்ட குழுவினர், இலங்கை தேசிய காங்கிரஸ், மற்றுமொரு தீவிரவாதி என்று அழைக்கப்பட்ட ஸட் பெர்னாண்டோ, தொழிற்சங்கவாதி ஏ.ஈ. குணசிங்க மற்றும் அவரது இளைஞர் கழகம் என்பன இணைந்து மணிலாலுக்கெதிரான நாடு கடத்தல் உத்தரவை எதிர்த்தனர். மணிலாலின் வருகையின் பின்பே, உலகெங்கும் புலம்பெயர்ந்து துயரும் இந்தியத் தொழிலாளர்களின் துன்பம் தொடர்பான தெளிவான கருத்துக்களை நடேசய்யர் பெற்றுக் கொண்டார். அக்கருத்துக்களே இந்தியத் தொழிலாளர்பால் கவனம் செலுத்த நடேசய்யரைத் தூண்டியது. மணிலால் இலங்கையில் இந்தியத் தமிழ் தொழிலாளர்கள் மிகவும் மோசமான நிலையில் அல்லல்படுகின்றனர் என்பதை உலகுக்கு வெளிப்படுத்தினார்.
1925ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து நடேசய்யர் இந்திய பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலனில் பெரிதும் அக்கறை கொண்டார். அக்காலத்தில் தோட்டங்களுக்குள் வெளியார் யாரும் நுழையாதவாறு அத்துமீறல் சட்டம் (tress pas) போடப்பட்டு தடை செய்யப்பட்டிருந்தது. இத்தகைய நிலையில் நடேசய்யர் இந்திய புடவை வியாபாரி போல் வேடம்பூண்டு தோட்டங்களுக்குள் சென்று அங்கு நிலவும் மிக மோசமான நிலைமைகளைக் கண்டறிந்து கொண்டார். அவற்றை "பெருந்தோட்ட ராஜ்யம் plantation raj' என்ற பெயரில் துண்டுப் பிரசுரங்களாகத் தொகுத்து வெளியிட்டார். இவை தோட்டத் தொழிலாளர் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்திருந்தன.
1925 ஆம் ஆண்டு இலங்கை வாழ் இந்திய மக்களுக்கு ஒரு திருப்புமுனையான வருடமாகும். இலங்கையில் சட்ட நிரூபமான சபையில் இந்திய மக்களுக்கென இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டன. நடேசய்யரும் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தார். எனினும் இவர் வெற்றிபெற்றால் தமக்கு அது பெரும் தலையிடியைத் தரும் என்று கருதிய தோட்டத் துரைமார்கள் மறைமுகமாக அவரைத் தோற்கடிக்க பல வழிகளிலும் முயற்சித்தனர்.அவர்கள் நோக்கம் நிறைவேறியது. நடேசய்யர் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். ஆனால் ஆறு மாதங்களிலேயே இடைத்தேர்தல் வந்தது. அதில் வெற்றி பெற்ற அவர் 1931 ஆம் ஆண்டு வரை இலங்கை வாழ் இந்தியர்களுக்காகவும், தோட்டத் தொழிலாளர்களுக்காகவும், தொடர்ச்சியாக குரல் கொடுத்தார். பின் 1936 தொடக்கம் 1947 வரை அரசாங்க சபை அங்கத்தவராக இதே விதத்தில் செயற்பட்டார்.

இந்தியத் தொழிலாளருடன் தமக்கிருந்த பற்றுதல் காரணமாக, கொழும்பு நகரத் தொழிலாளர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த, அக்காலத்தில் சக்திவாய்ந்த தொழிற்சங்கத் தøலவராக இருந்த ஏ.ஈ. குணசிங்கவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் நடேசய்யர். இவர்கள் இருவரும் சேர்ந்து தீவிரவாத கருத்துள்ள பத்திரிகையான போர்வார்ட் (forward) என்ற பத்திரிகையை 1926 ஆம் ஆண்டு வெளியிட்டனர். இப்பத்திரிகை மேலிடத்து ஊழல்களை பட்டவர்த்தனமாகத் தோலுரித்துக் காட்டியது. 1927ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட துறைமுக வேலை நிறுத்தத்தின்போது நடேசய்யர், இந்தியத் தொழிலாளர்களின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்து, அவர்களை முழுமையாக வேலை நிறுத்தத்தில் குதிக்கச் செய்தார். இதற்கு இலங்கை தொழிலாளர் யூனியன் பொறுப்பாக இருந்தது. விரைவி÷லயே நடேசய்யர் இச்சங்கத்தின் உப தலைவராக உயர்த்தப்பட்டார். ஆனால், அடுத்து வந்த காலப்பகுதி உலகப் பெருமந்த காலமாக இருந்ததால் பொருளாதாரக் கஸ்டங்கள் ஏற்பட்டன. இலங்கைத் தொழிலாளர் குறைந்த வேதனத்துக்கு தொழில் புரிந்தனர். இதனால், தொழிலாளர் உரிமைகளில் முரண்பாடுகள் ஏற்பட்டன. ஏ.ஈ. குணசிங்க பௌத்த தேசிய வாதத் தலைவரான அநாகரிக தர்மபாலவின் சிஷ்யராவார். எனவே அவரிடம் இயல்பாக இனவாதமிருந்ததை நடேசய்யர் சுட்டிக்காட்டி அவரது தொழிற்சங்கத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

1.6 மலையக தொழிற்சங்கவாதி

1931 ஆம் ஆண்டை ஒட்டிய காலகட்டத்தில் நடேசய்யர் தனது தொழிற்சங்க தலைமையகத்தை மலையகத்தின் ஹட்டன் நகருக்கு மாற்றினார். அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். தோட்டத் தொழிலாளர் பெருந்திரளாக அவர் சங்கத்தில் இணைந்தனர். அவரது கூட்டங்கள் சனத்திரள் நிறைந்து காணப்பட்டன. அவரது பேச்சால் தொழிலாளர் வசியப்பட்டு கவர்ந்திழுக்கப்பட்டனர். அவரது சங்கம் ஒரு நலன்புரிச் சங்கமாக இருந்தது. இவர் சிக்கனத்தை ஊக்குவித்தார். கூட்டுறவுக் கடைகள் அமைத்தõர், மதுபானத்துக்கு அடிமையாதலைத் தடுத்தார், சூதாட்டத்தை ஒழித்துக் கட்ட வேண்டுமென்றார், சகோதரத்துவத்தை வளர்த்தார், தொழிலாளர்களை கொத்தடிமை முறையிலிருந்து விடுவிக்க பெரும்பாடுபட்டார்.
தொழிலாளர்களிடையே கல்வியறிவை வளரச் செய்து அவர்களது சமூக, பொருளாதார நிலையை உயர்த்தப் öபரிதும் பாடுபட்டார் நடேசய்யர். இக்காலத்தில் தோட்டத் துரைமார்கள், கங்காணிகள், தொழிலாளர் ஆகியோர் மத்தியில் பெரும் போராட்டம் நிகழ்ந்தது. தொழிற்சங்கவாதிகள் தோட்டத்துக்குள் செல்ல முடியாததால் அருகிலுள்ள சிறு நகரங்களிலேயே கூட்டங்கள் நடத்தப்பட்டன. நகரத்திற்கு நகரம் "பெட்டிசன்' எழுதுபவர்கள் காணப்பட்டனர். அவர்கள் வாயிலாக பெட்டிசன்கள் எழுதப்பட்டு இந்திய ஏஜன்ட்டுக்கும், தோட்டத் துரைமாருக்கும் நீதிபதிகளுக்கும் அனுப்பப்பட்டன. 1929 இல் இவ்வித பெட்டிசன்களின் தொகை 956 ஆக இருந்தது. இது பின் 1933 ஆம் ஆண்டு 2,468 ஆக அதிகரித்தது.
நடேசய்யரின் நடவடிக்கைகளைத் தடுக்க தோட்டத் துறைமார்கள் பல இடையூறுகளைச் செய்தனர். கூட்டம் நடத்த நகரசபை வளவுகளை பெறுவதைத் தடுத்தனர். நடேசய்யர் மீண்டும் தனது நடவடிக்கைகளுக்காக "தோட்டத் தொழிலாளி' என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். இதற்கு எஸ்.எஸ். நாதன் என்பவர் ஆசிரியராக கடமையாற்றினார்.

1.7 இறுதிக்காலம்

நடேசய்யர் பிற்காலத்தில் தொழிலாளரின் வேதனக் குறைப்புக்கெதிராக மிகக் கடுமையாகப் போராடினார். அரசாங்க சபையிலும் அதற்கு வெளியிலும் தொழிலாளர் சார்பில் இவரது குரல் மிகப் பலமாக ஒலித்தது. அக்குரல் 7.11.1947 ஆம் நாளன்று ஓய்ந்து போனது. கோதண்ட ராமையா நடேசய்யர் இவ்வுலகினின்றும் நீங்கினார். ஒரு மனிதன் எத்தனை பரிமாணங்களில் செயற்பட முடியும் என்பதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு நடேசய்யர் என்ற அதிமானுடன். ஒரு பத்திரிகையாளன், எழுத்தாளன், தொழிற்சங்கத் தலைவன், அரசியல் தலைவன், இலக்கியவாதி, நாவலாசிரியன், கவிஞன் என இவரது பரிமாணங்கள் விரிந்து கொண்டே போகிறது. அத்தகைய ஓர் உயர் மானுடனின் சேவையை நன்றியுடன் நினைவு கூறி அடுத்த பரம்பரைக்கு எடுத்துச் சொல்லுதல் நமது தலையாய கடமையாகும்.
No comments:

Post a Comment